மஇகா பொது மாநாட்டிற்கு தேசிய முன்னணி தலைவர் ஜாஹிட் ஹமிடியை அழைக்காது-விக்னேஸ்வரன்
- kumara885
- Oct 18, 2025
- 1 min read

கோலாலம்பூர் அக்டோபர் 18- எதிர்வரும் நவம்பர் 16ஆம் தேதி தலைநகரில் நடைபெறவிருக்கும் மஇகாவின் தேசிய பொது மாநாட்டிற்கு தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஶ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி அழைக்கப்படமாட்டார்.
அம்மாநாடு ஒருநாள் மட்டுமே நடைபெறும் என்பதால் அம்னோ தலைவருமான ஜாஹிட் இம்முறை மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தினார்.
"அதுமட்டுமின்றி இம்முறை கட்சியின் உள்விவகாரங்கள் மட்டுமே கலந்தாலோசிக்கப்படும் என்பதால் அகமட் ஜாஹிட் உட்பட எந்த ஒரு கூட்டணி தலைவரையும் இம்முறை மஇகா இம்மாநாட்டிற்கு அழைக்கவில்லை," என்றார்.
நேற்று மஇகா தலைமையகத்தில் மத்திய செயலவைக் கூட்டத்திற்குத் தலைமையேற்றபின் முன்னாள் மேலவை சபாநாயகருமான விக்னேஸ்வரன் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.
இம்முறை மற்ற கூட்டணித் தலைவர்கள் அழைக்கப்படாதது புதியதொரு வழக்கம் அல்ல என்றும் இதற்கு முன் பங்காளி கட்சியுமான மசீசவும் அதன் மாநாட்டினை எந்த தேசிய முன்னணி கூட்டணி தலைவர்களையும் அழைக்காமல் நடத்தியதாக அவர் மேற்கோள் காட்டினார்.
அவ்வகையில், மசீசவைப் போன்று மஇகாவும் அதே வழியைப் பின்பற்றி பேராளர்கள் மாநாட்டினை நடத்தும் என்று முடிவெடுக்கப்பட்டுவிட்டதாக அவர் மேலும் சூளுரைத்தார்.
இவ்வேளையில் நேற்றைய மத்திய செயலவைக் கூட்டத்தில் மஇகா தேசிய முன்னணியில் நிலைக்குமா அல்லது வெளியேருமா என்பது பற்றி விவாதிக்கப்பட்டதா என்று ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், நவம்பர் மாநாட்டிற்கு காத்திருங்கள் என்று புன்னகை கலந்து ரத்தின சுருக்கமாகக் கூறினார்.





Comments