top of page

நிபா வைரஸ்: மலேசியர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள்

  • kirthana63
  • Feb 6
  • 1 min read
🦠 நிபா வைரஸ் அரிதானது, ஆனால் உயிருக்கு ஆபத்தானது. விழிப்புணர்வே பாதுகாப்பு.
🦠 நிபா வைரஸ் அரிதானது, ஆனால் உயிருக்கு ஆபத்தானது. விழிப்புணர்வே பாதுகாப்பு.

நிபா வைரஸ் என்பது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒரு ஆபத்தான வைரஸ் ஆகும். இது அரிதாகப் பதிவாகினாலும், அதிக உயிரிழப்பு விகிதம் மற்றும் குறிப்பிட்ட சிகிச்சை இல்லாததால் பெரும் சுகாதார அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.


இந்த வைரஸ் முதன்முறையாக 1998 ஆம் ஆண்டு மலேசியாவில் கண்டறியப்பட்டது. அப்போது பன்றி பண்ணைகளுடன் தொடர்புடைய ஒரு பெரும் தொற்று ஏற்பட்டது. பழவவ்வால்கள் (fruit bats) இந்த வைரஸின் இயற்கை மூலமாகக் கருதப்படுகின்றன. வவ்வால்களிலிருந்து பன்றிகளுக்கு, பின்னர் மனிதர்களுக்கு வைரஸ் பரவலாம். சில சூழ்நிலைகளில், மனிதர்களுக்கிடையேயும் நெருங்கிய தொடர்பின் மூலம் தொற்று பரவக்கூடும்.


தொற்றின் ஆரம்ப அறிகுறிகளில் காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்டை வலி அடங்கும். தீவிரமான நிலையில், இது மூளை அழற்சியை ஏற்படுத்தி குழப்பம், fits, மயக்கம் மற்றும் மரணம் வரை கொண்டு செல்லக்கூடும். வைரஸ் தாக்கத்திற்குப் பிறகு சில நாட்களிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் அறிகுறிகள் தோன்றலாம்.


தற்போது நிபா வைரஸுக்கென தனிப்பட்ட தடுப்பூசி அல்லது மருந்து இல்லை. நோயாளியின் நிலையை நிலைநாட்டும் ஆதரவு சிகிச்சை மட்டுமே வழங்கப்படுகிறது. அதனால், ஆரம்ப கட்டத்தில் நோயைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவது மிக முக்கியமானதாகும்.


பழங்களை நன்றாக கழுவி உண்ணுதல், வவ்வால்கள் தொட்டிருக்கக்கூடிய உணவுகளை தவிர்ப்பது மற்றும் மூல உணவுப் பொருட்களை தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. விலங்கு பராமரிப்பில் ஈடுபடுவோர் கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.


சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.


பொது விழிப்புணர்வும் தனிப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளும் எதிர்காலத் தொற்றுகளைத் தடுக்க முக்கியமானவை என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.


Comments


bottom of page