முன்னாள் பிரதமர் மருமகனைக் கண்டுபிடிக்க புதிய தடயம் - சைஃபுடின்
- kumara885
- Oct 31, 2025
- 1 min read

கோலாலம்பூர் - மலேசிய அரசாங்கத்தால் தேடப்பட்டுவரும் முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ முகைதீன் யாசினின் மருமகனும் தொழில் அதிபருமான டத்தோஶ்ரீ முகம்மது அட்லான் பெர்ஹானின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து கைது செய்து நாட்டுக்கு திரும்பக் கொண்டுவரும் முயற்சியில் அரச மலேசிட போலிஸ் படைக்கு புதிய வழிகாட்டி தடயங்கள் கிடைத்துள்ளது.
இந்த புதிய ஆதாரம் அனைத்துலக போலிசான இன்டர்போலுடன் மேற்கொண்ட ஒத்துழைப்பின் மூலம் கிடக்கப்பெற்றதாக, உள்துறை அமைச்சர் செனட்டர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மயில் உறுதிபடுத்தினார்.
"அனைத்துலக போலிஸ் இன்டர்போலுடன் நமது போலிஸ் படையின் ஒத்துழைப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், இந்த முன்னாள் பிரதமரின் மருமகன் இருப்பிடம் குறித்த விவகாரத்தில் எங்களுக்கு புதிய ஆதாரம் ஒன்று கிடைத்துள்ளது.
"இதை மட்டும் இங்கே நான் உறுதி செய்ய முடியும். ஆனால் அதனை விரிவாக என்னால் இங்கே சொல்ல முடியாது.
"அந்த புதிய தகவலை இங்கே பகிர்ந்தால், அது போலிஸ் விசாரணையை பாதிக்கும் என்று அஞ்சுகிறேன், அனைவரும் இதனை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்," என்று மக்களவையில் தெரிவித்தார்.
ஜெலுத்தோங் மற்றும் புக்கிட் குளுகோர் நாடளுமன்ற உறுப்பினர்களான ராயரும் ராம் கர்ப்பாலும் முன்னாள் பிரதமரின் மருமகனைக் கண்டுபிடிக்க அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி குறித்து கேள்வி எழுப்பியபோது சைஃபுடின் மேற்கண்டவாறு கூறினார்.
தேடப்பட்டுவரும் முகைதீனின் மருமகனுடைய அனைத்து விபரங்களும் இன்டர்போல் போலிசிடம் ஒப்படைத்து விட்டோம், அவர்களுக்கும் இது குறித்த தகவல்களும் முழுமையாக வைத்துள்ளதாக அவர் சொன்னார்.
"நானே ஒருமுறை இந்த விவகாரம் தொடர்பாக இன்டர்போல் உதவியை நாடி அதன் தலைவரை நேரில் சந்தித்து தகவலைப் பகிர்ந்துகொண்டேன்.
"அவ்வகையில் நமது அரச மலேசிய காவல் படை முகைதீன் மருமகனைத் தேடும் விவகாரத்தில் முழுமையாக இன்டர்போல் போலிசுடன் ஒத்துழைத்து வருகின்றனர்," என்று மேலும் கூறினார்.





Comments